Monday, January 7, 2019

பணம் என்றால் என்ன?


மானுட சமூகத்தில் வணிகமும், நாகரிகமும் ஒன்றை ஒன்று இரையாக்கி ஒன்றுக்கு ஒன்று இரையாகி வளர்ந்த இரட்டைகள். இவை இரண்டும் தோளோடு தோள் உரசி எழுந்த எழுச்சியில் தோன்றிய உபபொருட்கள் எண்ணற்றவை என்றாலும் அதில் முதன்மையானதும், மானுட சமூகத்துடனும் பிணைந்து, இடைவிடாமல் தொடர்வது "பணமே" ஆகும். பண்டமாற்று சமூகத்தில் வணிக, நாகரிக வளர்ச்சியின் வினையூக்கியாக புகுந்து பண்டமாற்று சமூகத்தை பணமாற்று சமூகமாக்கி வணிக, நாகரிக வளர்ச்சியை துரிதப்படுத்தியது பணம். அத்தகைய பணம் என்றால் என்ன? எனும் வினாவிற்கான விவாதம் இது.

பண்டமாற்று சமூகம்:  மானிட நாகரிகத்தில் தற்சார்பு நுகர்வைத்தாண்டிய தேவை அதிகரிப்பே வாணிபத்திற்கு வித்திட்டதுஉணவைத் தேடி அலைந்த மனிதன் உழவுக்கலைக் கற்று உழுத உற்பத்தியில் உபரியாகக் கிடைதவற்றை தனக்குத் தேவையான இதர பண்டங்களுக்கு மாற்றாக்கியதே பண்டமாற்று. இது பரிணாம வளர்ச்சியுற்று, பணிகளுக்கும் விரிவடைந்து முழுமையான பண்டமாற்று சமூகம் தோன்றியது
இங்கு "பண்டங்கள், பண்டங்களுக்கும்; பணிகளுக்கும் மாற்றாயின". உழவரின் உபரிப்பண்டங்கள் குயவரின் மண்பாண்டங்களுக்கும், ஆடை தைக்கும் தையல் கலைஞரின் பணிகளுக்கும் மாற்றாயின. இச்சமூகத்தில் வணிகமும், நாகரிகமும் செழித்தோங்கி மேன்மையுற்றது என்றாலும், இப்பண்டமாற்று முறையில் இருபெரும் குறைகளாக இருந்தன.
 முதலாவதாக பண்டங்கள் மற்றும் பணிகளின் உண்மை மதிப்பை, அளவிடுதலில் பெரும்சிக்கல் நிலவியது. இக்காலகட்டத்தில் தின்ம, நீர்ம பொருட்களை அளக்க, நிறுத்தல், நீட்டல், முகத்தல் போன்ற அளவுகள் தோன்றி பண்டங்களின் பரிமாற்றத்தில் ஒரு ஒழுங்கு நிலவினாலும், இவை பண்டங்களின் புறவய அளவுகளை மட்டுமே அளந்தன அன்றி உண்மையான மதிப்பை அளக்கவில்லை.
இருபடி காராம் பசும் பாலிற்க்கு, மாற்று ஒரு படி தங்க நாணயங்கள் அல்லது இரண்டு ஆட்டுக்கிடாய்களுக்கு ஒரு யானை மாற்றாயின என்றால் இப்பண்டங்களின் மதிப்பிடலில் எவ்வளவு சிக்கல் உள்ளது என்பதை நாம் உணரலாம். இங்கு பண்டங்களை மதிப்பீடு செய்யும் வித்தையில் சேர்ந்தவர்கள் பெரும் செல்வந்தர்கள் ஆயினர். இன்றளவும் நமது கிராம வீதிகளில் வரும் காய்கறி வியாபாரிகள், தகரத்திற்கு அரைஎடை, இரும்பிற்கு ஒரு எடை மற்றும் செம்பிற்கு இரண்டு எடை வெங்காயம் என்று வியாபாரம் செய்கின்றனர். இரும்பு அல்லது செம்பின் விலையுடன் ஒப்பிடும்பொழுது நாம் பெற்ற வெங்காயத்தின் மதிப்பு மிககுறைவு என்பது புரியும். ஆனால் அக்காலக்கட்டத்தில் ஒப்பீடு செய்ய விலை நிர்ணயம் இல்லாததுவே முதல்பெரும் குறை

இரண்டாவதாக உற்பத்தி செய்த பண்டங்களின் மதிப்பை தேக்கி நீண்ட நாட்களுக்கு பயன்படுத்துவதில் இருந்த சிக்கல், கம்பு, வரகு,நெல் போன்ற தானிய வகைகளை உற்பத்தி செய்த உழவர்கள் அவற்றை நீண்ட நாட்கள் வைத்து தங்களுக்கு தேவைப்படும் காலத்தில் தேவைப்படும் பண்டங்களை நுகர்வு செய்தனர்.ஆனல் குறை ஆயுள் பண்டங்களான பூக்கள், பழங்கள் மற்றும் காய்கறி உற்பத்தி செய்த உழவர்கள் தங்களின் உற்பத்தியை நீண்ட நாட்கள் தேக்கி வைக்க இயலவில்லை. அவர்கள் இப்பண்டங்களை பெரும் சிரமப்பட்டு தானியங்களாகவோ அல்லது உலோகங்கலாகவோ மாற்றினாலும் அவர்கள் உற்பத்தியின் பெரும் பகுதி வீணாகியது. அவர்களுக்கு அனைத்து பண்டங்களுக்கான பொதுவான மாற்று ஒன்று தேவைப்பட்டது. இக்காலக்கட்டத்தில் மானுட சமூகம், பண்டங்கள் மற்றும் பணிகளின் நுகர்விற்கு பொதுவான மாற்று ஒன்று தேவை என எடுத்த பல முயற்ச்சிகளின் விளைவாக தோன்றியதே "பணம்".

பணம்:
"பண்டங்கள் மற்றும் பணிகளின் நுகர்வு பதிலீட்டு மாற்றே பணம்" என்றாலும் அதை சற்று நுண்ணுணர்வுடன் அனுகினால், பண்டமாற்று சமூகத்தின் குறைகளை பணம் எவ்வாறு கலைந்தது என்பதை நம்மால் உணர முடியும். முதல் சிக்கல் பண்டங்களின் மதிப்பீடு-இன்று அனைத்து பண்டங்களும் பணத்தின் அளவிலேயே மதிப்பீடு செய்யப்படுகின்றது. மேலும், பணம் என்பது அனைத்து பண்டங்களுக்கான பொதுவான மாற்று என்பதால் குறை ஆயுள் பொருட்கள் அனைத்தும் எளிதில் பணமாக மாற்றி நீண்ட நாட்களுக்கு அவற்றின் மதிப்பை பயன்படுத்த முடிகின்றது.

இதன்மூலம் பணம் மூன்று தளங்களில் செயல்படுவதை நாம் உணர முடியும் முதலாவது-பண்டங்கள், பணிகளை மதிப்பீடு செய்யும் அளவுகோள்,
இரண்டாவது-மதிப்பினை தன்னுள் தேக்கி வைத்தல்,
மூன்றாவது- பண்டங்களின்,  பணிகளின் நுகர்வு பதிலீட்டு மாற்றாகவும் செயல்படுகிறது.

எனவே "மதிப்பை தன்னுள் தேக்கி பண்டங்கள் மற்றும் பணிகளின் நுகர்வுக்கு மாற்றாகி, அப்பண்டங்கள் மற்றும் பணிகளை மதிப்பீடு செய்யும் அளவியே பணம்" என்பதை உணரலாம். -திரவியன்

பணம் என்றால் என்ன?

மானுட சமூகத்தில் வணிகமும் , நாகரிகமும் ஒன்றை ஒன்று இரையாக்கி ஒன்றுக்கு ஒன்று இரையாகி வளர்ந்த இரட்டைகள் . இவை இரண்டும் தோளோடு ...